கதை, தொடர்கதை

நெடுகன் – 2. தேவதேவிகள்

தேவதேவிகள்

கிறுமுகர்கள் ஈனா தேசத்தின் வட பகுதியில் எல்லா இன மக்களையும் கொன்று குவித்து எல்லா இனங்களையும் அடிமை படுத்தி வாழ்ந்து வருபவர்கள். தேவதேவிகள் மட்டும் கிறுமுகர்களின் ஆதிக்கம் கண்டு பயப்படுவதில்லை, அவர்களின் ஆசா சக்தியை கண்டு கிறுமுகர்களே அஞ்சுவது ஒன்றும் புதிய விடயமல்ல, தேவதேவிகள் தீடீரென்று மறைந்து தாக்குவதில் வல்லவர்கள் அவர்களின் இந்த ஒரு சக்தியை மட்டும் தான் கிறுமுகர்களால் எதிர்கொள்ள முடியவில்லை.

nedugan-kottai

மும்முறை அகண்ட போர் நடத்தியும் இன்றுவரை தேவதேவிகளை அவர்களால் வெல்ல முடியவில்லை. தேவதேவிகளின் விசித்திர சித்திகளை எதிர் கொள்ள கிறுமுகர்கள் யாக்கினை பூசையை பல முறை தொடங்கினர் ஆனால் எப்படி தான் தேவதேவிகள் மோப்பம் பிடிப்பார்கள் என்று தெரியவில்லை ஒரு முறை கூட அந்த பூசையினை வெற்றிகரமாக அவர்களால் முடிக்க முடியவில்லை.

“புலிமறவா, உங்கள் புரவி எங்கே ? ஏன் இந்த பதற்றம் ?” பூவினியாவின் பரபரப்பிற்கு காரணம் புலிமறவன் அணிந்திருந்த பொன்னாலான மேலங்கியில் படிந்திருந்த நீல நிற ரத்தம்.

“விவரமாக சொல்வதற்கு நேரமில்லை, பூவினியா! முதலில் நான் கட்டளைகளை பார்க்க வேண்டும்.” புலிமறவன் அவளை வெகு வேகமாக கடந்து சென்றான்.

தேவதேவிகள் கலாச்சாரத்தில் அரசனை கட்டளை என்றே அழைப்பார்கள், முதல் மூன்று கட்டளைகள் அவர்கள் இனத்தின் மூன்று பெரிய பிரிவினருக்கும் அடுத்த மூன்று கட்டளைகள் பிற சிறிய பிரிவினருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது, கட்டளைகளின் முடிவே இறுதி அதை இன்று வரை எவருமே மீறியது இல்லை, ஒரே ஒரு முறை, ஒரு கட்டளையே மீற முட்பட்டதால் பூவலோகி பூசை மூலம் முடிவில்லா வேற்று பரிமாணத்திற்கு கடத்தி விட்டனர். அந்த கட்டளையின் கதை பெரிய கதை.

புலிமறவன் திடமான தேகத்துடன் அறிவு கூர்மையும் ஒன்று சேர்ந்தவன், கீழ் திசை சந்திர தேசமோ இல்லை ஈனா தேசமோ எந்த கண்டத்தில் இருப்பவர்களும் புலிமறவன் முகத்தசைவை கொண்டு எந்த விடயத்தையும் தெரிந்து கொள்ள இயலாது, அப்படி ஒரு இறுக்கமான முகமுடியவன், அவன் அதிகம் சிரித்து பேசுவது பூவினியிடம் மட்டும் தான்.

நெடுகன் – 1. பேரபாயம்